தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு அதிகம் உள்ள தொழில் பிரிவுகளை தேர்ந்தெடுத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் திறன் பயிற்சி வழங்க தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயிற்சி வழங்குநர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று பேசியதாவது:
பயிற்சி நிறுவனங்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இணையதளம் மூலம் ஆண்டு முழுவதும் இலவசமாக விண்ணப்பிக்கும் சேவை ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அமலில் உள்ளது.
எனவே திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிற் பிரிவுகளில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள பிரிவுகளை கண்டறிந்து, அவற்றில் திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பயிற்சி அளிக்க முன்வர வேண்டும். பயிற்சி பெற்றவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பைப் பெற்றுத் தர மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.