தமிழக அரசு அறிவித்த கரோனா நிவாரணத் தொகையை இன்னும் வழங்காததால் அதிருப்தியடைந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்று மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை சிஐடியு மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் மாநகராட்சியின் 4 மண் டலங்களிலும் பணியாற்றும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது.
சங்கத்தின் செயல் தலைவர் எஸ்.விஜயன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ம.பாலசுப்பிரமணியம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் பொருளாளர் கருப்பசாமி, துணைத் தலைவர் முருகன், வீரன், உதவிச் செயலாளர் நாச்சியப்பன், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறியதாவது: மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தினக்கூலி ஒப்பந்த கிராம பஞ்சாயத்து தொகுப்பூதிய பணியாளர்கள், 2006-ல் நிரந்தரப்படுத்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், பாதாள சாக்கடை ஒப்பந்த பணியாளர்கள், தெருவிளக்கு பிரிவில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள், பம்பிங் ஸ்டேஷனில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள், குடி நீர் பிரிவில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள், எல்சிவி ஒப்பந்த ஓட்டுனராக பணிபுரியும் தொழிலாளர்கள் என்று மாநகராட்சி பிரிவுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கரோனா காலத்தில் அறிவித்துள்ள ஊக்கத்தொகை 15 ஆயிரம் ரூபாயை தாமதமின்றி வழங்க வேண்டும்.
மாதாமாதம் பிஎப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மாநகராட்சி தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். 2021-22-ம் ஆண்டுக்கான தின சம்பளம் 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். நிரந்தர தொழிலாளர் களாக உள்ள தூய்மைப் பணி யாளர்களின் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். கிராம பஞ் சாயத்து தொகுப்பூதிய தூய்மை பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.