தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று தேசிய கொடி சரியாக கட்டாமல் அவமதிக்கப்பட்டுள்ளது. 
தமிழகம்

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடி அவமதிப்பு: தேச பற்றாளர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கம்பத்தில் தேசிய கொடியை சரியாக கட்டாமல் அவமதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடி தினசரி ஏற்றப்படுகிறது. காலையில் ஏற்றப்படும் தேசிய கொடி மாலையில் இறக்கப்படும். இந்நிலையில் நேற்று காலை தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. பின்னர், தேசிய கொடியின் மேல் பகுதியின் முடிச்சு, இறுக்கமாக கட்டாததால் அவிழ்ந்துள்ளது. இதனால் தேசிய கொடியால் பட்டொளி வீச முடியவில்லை. கம்பத்தின் உச்சியில் இருந்து சுமார் 1 அடிக்கு கீழே தேசிய கொடி இருந்தது. இதையறிந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுத்தனர்.

இதையடுத்து காவல் துறையினர், தேசிய கொடியை மீண்டும் கீழே இறக்கி, கயிறுகளை சரியாக கட்டி மீண்டும் பறக்கவிட்டனர். நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றுவதில் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர் என தேச பற்றாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது போன்ற செயல்களும் தேசிய கொடியை அவமதிப்பதாகும் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT