திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டி சுயஉதவிக்குழுவினருடன் காணொளி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி  
தமிழகம்

சுய உதவிக்குழுவினர் சமூக சேவையும் செய்யவேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை 

பி.டி.ரவிச்சந்திரன்

சுய உதவிக்குழுவினர் வருமானத்தை அதிகரித்து, தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் சேவை செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழவேண்டும் எனப் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.

ஒவ்வொரு மாநில சுய உதவிக்குழுக்களுடன் தனித்தனியாக உரையாடியவர் பின்னர் அவர்களின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுத் தெரிவித்து அறிவுரைகளை வழங்கினார். முன்னதாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுய உதவிக்குழுவினர் செயல்பாடுகள் குறித்த வெற்றிக் கதைகள் தொகுப்பையும் வெளியிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டியில் சுய உதவிக்குழுவினர் நடத்திவரும் பாலித்தீன் மறுசுழற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்துப் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இதுகுறித்துப் பஞ்சம்பட்டி சுய உதவிக்குழு பொறுப்பாளர் ஜெயந்தி பிரதமர் மோடியுடன் காணொளி மூலம் பேசுகையில், ''2010-ம் ஆண்டு சுய உதவிக்குழு மூலம் பிளாஸ்டிக் மறு சுழற்சி யூனிட் தொடங்கினோம். இதன் மூலம் எங்களுடைய சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பாலித்தீன் கழிவுகளைப் பெற்று, தரம் பிரித்து அவற்றை மறு சுழற்சி செய்தோம். ரூ.5 லட்சம் முதலீட்டில் இயந்திரங்கள் மூலம் அவற்றை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி தார்க் கலவையுடன் சேர்த்து சாலை அமைப்பதற்கு விற்பனை செய்தோம். ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை ரூ.5-க்குப் பெற்று மறுசுழற்சி மூலம் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்கிறோம்.

திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டியில், பிரதமர் மோடியுடன் காணொளி மூலம் கலந்துரையாடிய சுயஉதவிக்குழு பொறுப்பாளர் ஜெயந்தி (வலது).

இதுவரை 102 டன் பிளாஸ்டிக் கழிவுகளை ரூ.30 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளோம். இதனால் எங்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வருமானத்தின் மூலம் எங்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது.

மேலும் கிராமப்புறங்கள் பாலித்தீன் கழிவுகள் இன்றி சுத்தமடைந்துள்ளன. நீர் நிலைகள் பாலித்தீன் கழிவுகளால் மாசுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.

இவருடன் பேசிய பிரதமர் மோடி, ''உங்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. வருமானத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல், சமுதாயத்திற்குச் சேவை செய்யும் நோக்குடன் செயல்பட்டுள்ளீர்கள். சுதந்திர தினம் முதல் அடுத்த சுதந்திர தினம் வரை தினமும் சமுதாயத்திற்கு எனச் சிறிது நேரம் ஒதுக்கி செயல்படவேண்டும். உங்கள் குழுவில் படிக்காதவர்கள் யாரும் இருந்தால் அவர்களைப் படிக்க வையுங்கள். இதுவும் சமுதாய சேவைதான்.

கிராமப்புறங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுங்கள். உங்களின் செயல்பாடுகளை மற்ற மாநில சுய உதவிக்குழுவினரும் கண்டு பிற மாநிலங்களிலும் செயல்படுத்தவேண்டும். சுய உதவிக்குழுவினர் வருமானம், வாழ்வாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சமுதாயத்திற்கு சேவைகள் செய்து முன்னுதாரணமாக திகழ வேண்டும்'' என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் அலைபேசி மூலம் வீடியோ அழைப்பில் சுயஉதவிக் குழுவினருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT