கிராம சபைக் கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, திமுகவின் சாயம் வெளுத்துவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், ஜன. 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆக.15 சுதந்திர தினம், அக். 02 காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில், கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இக்கூட்டங்களில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கையை முன்வைப்பார்கள். இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த ஓராண்டாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
இதனால், இந்தாண்டு சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக, கமல்ஹாசன் கோவை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்திருந்தார்.
இதற்கிடையே கரோனா காரணமாக வரும் 15-ம் தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டாம் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்துப் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், ''கரோனாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டப்பேரவை நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்தத் தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது'' என்று தெரிவித்துள்ளார்.