தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திசைதிருப்பத்தான் நிதிநிலைமை குறித்துப் பேசுகிறோமா என்ற கேள்விக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.
அவர் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:
''தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திசைதிருப்பத்தான் நிதிநிலைமை குறித்துப் பேசுவதாகச் சொல்கிறீர்கள். இருக்கின்ற சூழலை வெளிப்படைத் தன்மையுடன் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். சட்டபேரவையில் 110 விதிகளின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் நூற்றுக்கணக்கான அறிவிப்புகளை வெளியிட்டனர். ஆனால் அவற்றில் எவை எவை நடந்தன, எவை நடக்கவில்லை என்று தெரியவில்லை. பணம் காணாமல் போனது எங்கே என்று தெரியவில்லை.
நிதி நிலையில் உள்ள தவறான சூழலைத் திருத்த வேண்டும் என்றால் முதலில் தகவல்களைத் திரட்ட வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். சூழலை நாங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதை மக்களிடம் எடுத்துச் சொல்லி விவாதம் நடக்கட்டும். அதன்பிறகு நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து மக்களின் கருத்துகளையும் சேர்த்து, எப்படித் திருத்தலாம் என்பதை உள்வாங்க வேண்டும். பிறகு திட்டங்களைத் தீட்டி அதனைச் செயல்படுத்துவோம். அதுதான் ஜனநாயக மரபு, வெளிப்படைத்தன்மை என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் 1 ரூபாய் கடன் வாங்கினால் 50 பைசா முதலீடு செய்தோம் என்கிறார். பொறுப்புள்ள நிதி மேலாண்மைப்படி வருவாய்க் கணக்கில் பற்றாக்குறையே இருக்கக் கூடாது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்ட கடன், 100% மூலதனத்திற்குச் செலவிடப்பட்டது. அதற்குப் பிறகு உபரியாக இருந்ததும் மூலதனத்துக்கே செலவிடப்பட்டது.
ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ’தொலைநோக்குப் பார்வை திட்டம் 2023’ என்று அறிவித்தனர். அதை வைத்துதான் 3 தேர்தல்களை நடத்தினர். நிதி மேலாண்மைக் கட்டமைப்பு நிறுவனங்களில் ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன. அதுகுறித்துப் பிறகு பேசுவேன்.
அதிமுக ஆட்சியில் 3 சதவீத உற்பத்தியில் 1.5 சதவீதப் பற்றாக்குறையை வைத்துவிட்டு 1.5 சதவீதம் முதலீடு செய்தனர். இது எப்படிப் பொறுப்புள்ள மேலாண்மையாக இருக்கும்? எவ்வாறு மக்களுக்கான வளர்ச்சியாக இருக்கும்? குஜராத், கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தச் சூழ்நிலை இல்லை. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்கூட இந்தச் சூழ்நிலை இல்லை. அவர்களுக்கெல்லாம் இல்லாத திறமைதான் இவர்களுக்கு இருக்கிறதா?''
இவ்வாறு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.