தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோருடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். 
தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

எஸ்.நீலவண்ணன்

உள்ளாட்சித் தேர்தலையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஆக.12) மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேசியதாவது:

"நமது அரசியலமைப்பின்படி ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது நடைமுறையாக இருந்து வருகிறது. அவ்வாறு நடைபெறும் தேர்தல் மிகவும் கட்டுப்பாட்டுடனும், நடுநிலையுடனும், பாதுகாப்புடனும் நடைபெற வேண்டும். எனவே, நடுநிலையுடன் தேர்தல் பணியாற்ற இருக்கின்ற அலுவலர்களாகிய நாம் அனைவரும், தேர்தல் குறித்த அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

தேர்தலைப் பொறுத்தவரையில், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி பட்டியல் தயாரித்தல், தேர்தல் கண்காணிப்புப் பணிகள், தேர்தல் நன்னடத்தை விதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் குறித்த முக்கியப் பணிகள் உள்ளடங்கியுள்ளன.

ஆகவே, இந்த ஆய்வுக்கூட்டத்துக்கு வந்துள்ள விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இக்கூட்டத்தில் அளிக்கப்படும் பயிற்சிகளை முறையாக அறிந்துகொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும். மேலும், தேர்தல் பணிகள் குறித்து தங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை வெளிப்படுத்தி இக்கூட்டத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்".

இவ்வாறு பழனிகுமார் தெரிவித்தார்.

தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்குச்சாவடி பட்டியல் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் மற்றும் தேர்தல் முதற்கட்ட ஆயத்தப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தேர்தல் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், உரிய படிவங்கள் மற்றும் அவசியப் பொருட்கள் தயார் நிலையில் வைத்திருத்தல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல்,வேட்பு மனு வழங்குதல், வேட்பு மனு பரிசீலனை உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் சுந்தரவள்ளி, ஆட்சியர்கள் விழுப்புரம் மோகன், கள்ளக்குறிச்சி ஸ்ரீதர், எஸ்.பி.க்கள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி ஜியாவுல்ஹக், மாநிலத் தேர்தல் ஆணைய முதன்மைத் தேர்தல் அலுவலர்கள் அருண்மணி, தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT