அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாஜக கூட்டணி அமையும் என மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று தெரிவித்ததாவது:
தமிழகத்தில் பாஜக தேர்தல் கூட்டணி குறித்து, தலைமையிலிருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. மற்ற எந்த கட்சியும் கூட்டணி குறித்து முழுமையான அறிவிப்பை வெளியிடவில்லை. அரசியல் சூழ்நிலைகளை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து, தகுந்த நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு, வெறும் வாக்குறுதியாக மட்டும் இல்லாமல், உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கும்பகோணம் மகாமகத்துக்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளனர். மகாமகத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பது நியாயமானதல்ல. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவுக்கு திரளாக வரக்கூடிய பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இதில், தமிழக முதல்வர் கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் பாஜக நிலையான கட்சியாக உருவெடுத்து வருகிறது. இனி வரும் காலங்களில் எந்த கூட்டணியும் இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக உருவாகி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என்றார்.
கும்பகோணத்தில்…
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், விளம்பரம் மற்றும் காட்சி இயக்குநரகம் சார்பில் மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், முன்னேற்றத்தின் புதிய எழுச்சி என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
பாணாதுறை மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு தஞ்சாவூர் ஆட்சியர் என்.சுப்பையன் தலைமை வகித்தார். சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.சேதுராமன், பொதிகை தொலைக்காட்சி சென்னை செய்திபிரிவு இயக்குந ஈ.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புகைப்பட கண்காட்சியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்துப் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து சாஸ்த்ரா பல்கலைக்கழக கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற தூய்மை இந்தியா பேரணியை பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.