தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மேலாளர் சுமதி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, மக்கள் போராட்டத்தால் 2018 ஏப்ரலில் மூடப்பட்டு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அவசரப் பணிக்காக குறைந்த அளவு மின்சாரம் விநியோகம் செய்ய விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இந்நிலையில் கரோனா 2-ம் அலை பரவலின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டது. அதன்படி 2132.64 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன், 7833 மெட்ரிக் கியூப் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்திக்காகப் பயன்படுத்திய எண்ணெயை வெளியேற்றவும், ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களைச் சரிசெய்யவும் உள்ளூர் உயர்மட்டக் குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டது. இதுவரை அனுமதி தரவில்லை.
எனவே, ஆக்சிஜன் தயாரிப்புக்குப் பயன்படுத்திய ரூ.200 கோடிமதிப்புள்ள எண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள், கழிவுகளைவெளியே கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்க உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுநீதிபதிகள் எம்.துரைச்சாமி, எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்.2-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.