கடலில் தத்தளிப்பவர்களை காப்பாற்ற புதிய மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கி தத்தளிப்பவர்களை காப்பாற்ற கடற்கரையிலேயே இருந்து செயல்படும் புதிய மீட்புக் குழுவை செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் என்ற அமைப்பு, அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது.
‘பீச் 2014’ என்ற இத்திட்டத்தில், சென்னை மாநகராட்சி, கடலோர காவல்படை, சென்னை மாநகர காவல்துறை ஆகியவை இணைந்துள்ளன. இதன்படி முதல் கட்டமாக மெரினா கடலில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை மற்றும் விடுமுறை நாட்களில் மாலை 4 முதல் 9 மணி வரை கடற்கரையில் மீட்புப்பணிகளில் ஈடுபடும். இதற்காக தற்காலிக பூத் ஒன்று அமைக்கப்பட்டு அதில் ஒரு மருத்துவர், செவிலியர், நீச்சல் வீரர் ஆகியோர் இருப்பார்கள். இது தவிர செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அமைப்பின் சீருடை அணிந்த காப்பாற்று குழுவை சேர்ந்த மூன்று பேர் இருப்பார்கள்.
இது குறித்து செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைவர் டி.வடிவேல் முகுந்தன் கூறியதாவது:
கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை, மெரினா, மகாபலிபுரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் நாங்கள் ஒரு ஆய்வு நடத்தினோம். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தான் அதிகமானோர் கடலில் மூழ்கி இறக்கின்றனர் என்று இந்த ஆய்வில் தெரியவந்தது. அதோடு ஒவ்வொரு கடலும் ஒவ்வொரு விதமான ஆபத்து இருக்கிறது. திருச்செந்தூரில் பாறைகள், கன்னியாகுமரியில் சுத்து அலை உள்ளது. சென்னையையொட்டிய மெரினா, எலியட்ஸ், மகாபலிபுரம் ஆகிய கடல்களில் சீரற்ற ஆழம் காணப்படுகிறது. இதனால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் கே. ரோசய்யா கூறுகையில், “செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் நடத்திய சோதனை பயிற்சி வெற்றியடைந்துள்ள நிலையில் இந்த திட்டம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. இது போல் வேறு எங்கெல்லாம் முதலுதவி தேவை என்பதை கண்டறிந்து அங்கும் இவர்கள் செயலாற்ற வேண்டும். மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி வழங்க வேண்டும்,” என்றார்.
இந்நிகழ்ச்சியில் செயின்ட் ஜாயின்ஸ் ஆம்புலன்ஸ் அமைப் பில் சிறப்பாக பணியாற்றிவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி உள்ளிட்டோருக்கு ஊக்குவிப்பு விருதுகள் வழங்கப்பட்டன.