தமிழகம்

ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் விஷ ஊசி போட்டு மாணவி தற்கொலை

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள செங்குந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சோபியா (27). இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டமேற்படிப்பு (எம்டி) படித்து வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் சோபியா தங்கியிருந்த அறை நேற்று முன்தினம் வெகுநேரம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் தமயந்தி உள்ளி்ட்டோர் அறைக் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சோபியா மூக்கில் ரத்தம் வழிந்த நிலையிலும், வாயில் நுரையுடனும், உடல் நீலநிறத்திலும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோபியா சடலத்தை கைப்பற்றி, விசாரணை செய்தனர். மேலும் அந்த அறையை சோதனையிட்டனர். அப்போது, சோபியா கையில் ஊசி செலுத்திக் கொண்ட அடையாளமும், உடல் அருகே சிரிஞ்சு இருப்பதையும் போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து சோபியா சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘`சோபியா விஷ ஊசியை தனக்கு தானே செலுத்திக் கொண்டு தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அவர், கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக சோபியாவின் தோழிகள் தெரிவித்தனர். இது குறித்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

SCROLL FOR NEXT