தமிழகம்

தமிழக அரசுத் திட்டங்களுக்கு வரலாற்று நாயகர்கள் பெயர் சூட்டக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

தமிழகத்தின் அரசுத் திட்டங்கள் மற்றும் கட்டிடங்களுக்குத் தமிழகத்தின் வரலாற்று நாயகர்கள், தமிழ்ப் பற்றாளர்களின் பெயர்களைச் சூட்டக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ.முகமது ரஸ்வி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழ்ப் பண்பாடும், கலாச்சாரமும் மிகவும் மேன்மையானது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ் அறிஞர்கள், தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் சாதி முத்திரை குத்தப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டனர். திராவிடக் கட்சிகள் அரசியல் லாபத்திற்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும், பொது இடங்களுக்கும் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பெயர்களைச் சூட்டின.

மேலும், அந்த அரசுகள் தாங்கள் தமிழகத்தைக் காக்க வந்த கர்த்தாக்கள் என்றும், அவர்கள் இல்லாவிட்டால் தமிழர்களும், தமிழகமும் அழிவுப் பாதைக்குச் சென்றிருப்பார்கள் என்றும் வரலாற்றைத் திரித்து எழுதியுள்ளன. இது தமிழகத்தின் பெருமை, கலாச்சாரம் மற்றும் ஆன்மிக நம்பிக்கையைத் தகர்த்து எரிவதற்குச் சமமானதாகும்.

எனவே, தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்குரிய இடங்கள், கல்வி நிலையங்கள், சாலைகள், பாலங்கள், தெருக்களுக்குத் தமிழர்களின் மாண்பு, கலாச்சாரம், ஆன்மிக நம்பிக்கை மற்றும் மதச்சார்பற்ற சகோதரத்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் வரலாற்று நாயகர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், தமிழறிஞர்களின் பெயரைச் சூட்ட உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார். மனு தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT