வயிற்றில் 7 கிலோ கட்டியுடன் 6 மாதம் வலியால் துடித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அந்தக் கட்டியை அகற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
மதுரை பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சர்மிளா தேவி (29). இவர் கடந்த 6 மாதத்திற்கு மேலாக வயிறு வீக்கம் மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நலப் பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு 30x30 செ.மீ. அளவுள்ள சினைப்பைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அது சுமார் 7 கிலோ அளவுடைய சினைப்பைக் கட்டி என்பதால், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள், பல மணி நேரம் போராடி அந்தக் கட்டியை மிகுந்த சிரத்தையுடன் அகற்றினர்.
மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் சுமதி, மகப்பேறு மருத்துவத் துறை இணைப் பேராசிரியர் சுதா, மருத்துவர் ஜோஸ்பின் மற்றும் மயக்க மருத்துவத்துறைத் தலைவர் செல்வகுமார், மருத்துவுர் சுதர்சன் ஆகியோரைக் கொண்ட குழுவால் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு திசு பரிசோதனையில் சாதாரணக் கட்டி (benign) என்று கண்டறியப்பட்டுள்ளது . தற்போது நோயாளி பரிபூரண உடல் நலமுடன் உள்ளார். மருத்துவக் குழுவிற்கு, மருத்துவக்கல்லூரி முதல்வர் இரத்தினவேல் பாராட்டு தெரிவித்தார்.