காங்கிரஸ் - திமுக ஆட்சியில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து விரிவான விசாரணைக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட வேண்டும் என்று புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் கடந்த திமுக- காங்கிரஸ் ஆட்சியில் குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் போலிப் பத்திரம் தயாரித்தல், ஆள்மாறாட்டம் செய்து வெளிநாடுகளில் வசிப்போர் மற்றும் யாரும் இல்லாத முதியோர்களின் சொத்துகள் குறிவைத்து சொத்துகள் அபகரித்தல் போன்றவை நடக்கின்றன. பல்வேறு கட்சிகளில் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் போலியாக அரசு முத்திரை, ஆதார் கார்டு, தயாரித்தும் போலிக் கையெழுத்து மூலம் ஆவணங்களைத் தயார் செய்தும், நிலத்தை அபகரித்து, பிளாட் போட்டு விற்பதும் தடையின்றி நடந்து வருகிறது.
தற்போது பேராசிரியர் மும்தாஜ் பேகம் என்பவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் காலி நிலத்தை வேறோரு நபரை மும்தாஜ் பேகம் போன்று செட்டப் செய்து நிலத்தை அபகரித்துள்ளனர். அந்தப் போலி நபர் வில்லியனூரில் வசிப்பதாக போலி ஆதார் கார்டு, தயாரித்து மோசடி செய்துள்ளனர். தற்போது திமுகவின் காரைக்கால் மாவட்ட திமுகவின் இளைஞரணித் துணை அமைப்பாளர் (கட்டபொம்மன் (எ) செந்தில்குமார்) உள்ளிட்ட ஒருசிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கை போதுமானதல்ல.
காரைக்காலில் திமுக உள்ளிட்ட கட்சிகளில் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மாஃபியா கும்பல் போன்று சுமார் 75 கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பிறருடைய சொத்துகளை அபகரித்துள்ளனர். இதற்கு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுத் துறையில் பணிபுரியும் பல உயரதிகாரிகள் உடந்தையாக உள்ளளர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் பிரான்ஸ் நாட்டில் புகார் அளித்ததன் அடிப்படையில் பலகட்ட விசாரணைகள் நடந்தன. அதேபோன்று கடந்த திமுக- காங்கிரஸ் ஆட்சியிலும் போலிப் பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு நடந்துள்ளது. முதல்வர் ரங்கசாமி இது சம்பந்தமாக ஒரு உயர்மட்ட விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
விசாரணைக்கு முன்பாக போலிப் பத்திரம் தயாரித்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், போலிப் பத்திரங்களைப் பதிவு செய்த அதிகாரிகள், போலி ஆதார் கார்டு வழங்கிய அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்யவேண்டும். ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் பெறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்".
இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.