தமிழகம்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் எனத் தெரியாது: மத்திய அரசின் தகவலால் அதிர்ச்சி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் எனத் தெரியாது என்றும், திருத்தப்பட்ட இலக்கு நிறைவுத் தேதிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் ஆர்டிஐ-ல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழத்தில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இடம் தேர்வில் ஏற்பட்ட மூன்றாண்டு போராட்டத்திற்குப் பின் 2018-ல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதாக அறிவிக்கப்பட்டது. 2019 ஜனவரி 27-ல் மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் தற்போது 31 மாதங்கள் நிறைவடைந்துவிட்டன.

மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தமானது 26.03.21 அன்று இந்திய மற்றும் ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது. ஆனாலும், கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய்ப் பிரிவு ஒன்றையும் மற்றும் சில சேவைகளையும் மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன. புதிய, திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.1977.80 கோடி எனவும், அதில் ரூ.1627.70 கோடி 'ஜெய்கா' கடன் வாயிலாகவும் மீதம் பட்ஜெட் ஒதுக்கீடு வாயிலாகவும் திட்டச் செலவினம் ஈடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த திட்டக் அமலாக்கக் குழுவிற்கான பதவிகள் உருவாக்கப்பட்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர் (நிர்வாகம்), கண்காணிப்புப் பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டமானது கடந்த ஜூலை 16ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, மதுரை எய்ம்ஸ் டெண்டர், மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டுமானப் பணிகள் சம்பந்தமாக பல்வேறு தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய அரசிடம் கோரியிருந்தார்.

அதற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்த பதிலில், ‘‘திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர வேற எந்த டெண்டரும் விடப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கப்படும் தேதி தற்போது இல்லை. எப்போது தொடங்கும் எனத் தெரியாது. மதுரை எய்ம்ஸ் கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவுத் தேதிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் ஒப்பந்தம் கையெழுத்தானதால் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருந்தனர். ஆனால், கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி ஐந்து மாதங்கள் முடிந்த பின்னும் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்றே தெரியாததால் தென் மாவட்ட மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நிலம் கையகப்படுத்துதல், கடன் ஒப்பந்தம் கையெழுத்து, திட்ட வரைபடம் தயாரிப்பு என ஒவ்வொரு காரணமாகக் கூறப்பட்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு வெறும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்தியாவில் அறிவிக்கப்பட்ட மற்ற 21 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, ஒரே மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டும் 31 மாதங்கள் கடந்தபின்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு ஆறரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இனியும் மத்திய, மாநில அரசுகள் தாமதம் செய்யாமல் உடனடியாகக் கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT