*
லஞ்சப் புகாரில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது, அரசின் ஒப்புதல் பெறாமல் வழக்கு பதிவு செய்யக் கூடாது என லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு பொதுநல வழக்கில், ‘ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளும் அரசாங்க ஊழியர்கள்தான். அவர் களுக்கு மட்டும் சலுகை காட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் புகார் குறித்து அரசின் முன் அனுமதி பெறாமல் லஞ்ச ஒழிப்பு போலீஸாரே நேரடியாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி அரசு புதிய உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக அரசு தலைமை வழக் கறிஞர் உத்தரவாதம் அளித்திருந் தார்.
இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் கடந்த 2-ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றி அரசு ஊழியர்கள் அனைவரையும் சமமாக பாவித்து அவர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்கும் வகையில் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி தமிழகத்தில் உள்ள எந்த அரசு ஊழியராக இருந்தாலும், அவர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஊழல் தடுப்பு போலீஸார் நேரடியாக விசாரணை நடத்தவோ, வழக்கு பதிவு செய்யவோ கூடாது.
அரசு ஊழியர்கள் மீது வரும் புகார்களை ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அனுப்பி, அரசின் முன் அனுமதி மற்றும் ஒப்புதலை பெற்ற பிறகே, ஊழல் தடுப்பு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன், ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த உத்தரவு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரண்பட்ட ஒன்று. அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி ஊழல் தடுப்பு போலீ ஸார் குற்றவியல் விசாரணை மற் றும் ஊழல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது அவர்களின் கடமை. அந்த கடமையை முடக்கும் வகையில் இந்த விநோத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.