கனமழை காரணமாக திருவள்ளூர் அருகேயுள்ள காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீர். 
தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்: இடிதாக்கி 5 மாடுகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சில பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்தது.

நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (சென்டி மீட்டரில்): திருவள்ளூர் 13.5, தாமரைப்பாக்கம் 9.7, பூண்டி 9.1, பள்ளிப்பட்டு 9, சோழவரம் 6.8, பூந்தமல்லி 5.2, திருத்தணி 4.1, திருவாலங்காடு 3.5, ஜமீன் கொரட்டூர் 3.4, ஊத்துக்கோட்டை 3, கும்மிடிப்பூண்டி 2.5, பொன்னேரி 2, செங்குன்றம் 1.7, ஆர்.கே.பேட்டை1.5. மாவட்டத்தில் சராசரியாக 5.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. திருவள்ளூர் அருகேயுள்ள காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட வி.எம்.நகர், மா.பொ.சி. நகர், விவேகானந்தர் நகர், கல்யாணசுந்தரம் நகர், வள்ளலார் நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும், கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வயலூர் கிராமத்தைச் சேர்ந்த தன்ராஜ், வசந்தா சம்பத், செல்வகுமார் ஆகிய விவசாயிகளின் 2 கன்றுக்குட்டிகள் உட்பட 5 மாடுகள் இடி தாக்கியதில் உயிரிழந்தன.

மழை, கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக மொத்தம் 11.757 டிஎம்சிகொள்ளளவு கொண்ட, சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான, பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகளின் நீர் இருப்பு 8.200டிஎம்சி-யாக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT