நாட்றம்பள்ளி அருகே தனியார் கல்லூரியில் எரி கல் விழுந்த இடத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
வேலூர் மாவட்டம் நாட்றம் பள்ளி கே.பந்தாரப்பள்ளி என்ற கிராமத்தில் பாரதிதாசன் பொறியி யல் கல்லூரியில் நேற்று முன்தினம் பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. இதில், கல்லூரிப் பேருந்துகள் மற்றும் வகுப்பறைகளின் கண்ணா டிகள் நொறுங்கின. அதே கல்லூ ரியில் பேருந்து ஓட்டுநராக பணி யாற்றி வந்த வெள்ளேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ்(48) என்பவர் உயிரிழந்தார். ஒரு மாணவரும், கல்லூரியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த 3 பேரும் படுகாயமடைந்தனர்.
தடயவியல் துறை இணை இயக்குநர் பாரி மற்றும் வெடி குண்டு நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். வெடித்து சிதறியது வானத்தில் இருந்து விழுந்த எரி கல்லாக இருக்கலாம் எனக் கூறப் படுகிறது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால், செய்தி யாளர்களிடம் கூறும்போது, “தனி யார் கல்லூரியில் விழுந்தது எரி கல் என முதல்கட்ட ஆய்வில் கண்ட றியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி யாளர்கள் கூறியுள்ளனர்” என்றார்.
சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட எரி கல், மண் ஆகியவை அகமதாபாதில் உள்ள இஸ்ரோ ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற் கிடையே, அகமதாபாத் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு, கல்லூரி வளாகத் தில் நேற்று ஆய்வு செய்தது. எரி கல் விழுந்த இடம், சேதமடைந்த கட்டிடப் பகுதிகள், பேருந்துகள் ஆகியவற்றை ஆய்வு செய்தது. கடந்த ஜன. 26-ம் தேதி வாணி யம்பாடியடுத்த பெத்த வேப்பம்பட்டு கிராமத் தில் பழனி என்பவரது விவசாய நிலத்தில் பயங்கர சத்தத்துடன் மர்மப் பொருள் விழுந்த இடத்தையும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் கள் தரப்பில் கூறும்போது, ‘‘கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ் ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே 6 இடங்களில் பயங்கர சத்தத்து டன் எரி கல் விழுந்தது. நாட்றம் பள்ளி அருகே விழுந்த எரி கல் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த கல் மாதிரி, சென்னை தடயவியல் துறைக்கும், இஸ்ரோ ஆராய்ச்சி மையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
உயிரிழந்த காமராஜ் குடும்பத் துக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் நிதி
விண்கல் விழுந்து இறந்த கல் லூரி வாகன ஓட்டுநர் குடும்பத் துக்கு ரூ.1 லட்சம் மற்றும் காய மடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் விழுந்த விண்கற்கள்
- என். ராமதுரை
வேலூர் நாட்றம்பள்ளியில் வந்து விழுந்த “மர்மப் பொருள்” ஒரு விண்கல்லாக இருக்கலாம் என்று பூர்வாங்கத் தகவல்கள் கூறுகின்றன. வானிலிருந்து விண்கற்கள் ஆங்காங்கு பூமியில் வந்து விழுவது அவ்வப்போது நிகழ்வதே.
ஒரு விண்கல் தமிழகத்தில் வந்து விழுவது இது முதல் தடவை அல்ல. 2008-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி காலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி என்னுமிடத்தில் ஒன்றல்ல பல கற்கள் வந்து விழுந்தன. நாட்றம்பள்ளியில் ஏற்பட்டதுபோலவே அப்போதும் பயங்கர சத்தம் கேட்டது. நல்லவேளையாக அப்போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விண்கற்கள் அனைவரும் பார்க்கும் வகை யில் கண்ணெதிரே வந்து விழுவது அபூர்வமே. சூளகிரியில் விழுந்த விண்கற்கள் சேகரிக் கப்பட்டு கொல்கத்தா அரசு அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் ஒரு சமயம் கொடைக்கானலிலும் விண்கற்கள் வந்து விழுந்தன.
அண்டவெளியில் எண்ணற்ற விண்கற்கள் அதிவேகத்தில் பாய்ந்து சென்ற வண்ணம் உள்ளன. இவற்றின் வேகம் மணிக்கு 63 ஆயிரம் கிலோ மீட்டர் அளவில் இருக்கலாம். ரஷ்யாவில் 2013-ம் ஆண்டு ஒரு பெரிய விண்கல் நடுவானில் வெடித்து அதன் துண்டுகள் கீழே வந்து விழுந்தன. அப்போது 7200 அடுக்குமாடி வீடுகளில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து 1200 காயமடைந்தனர்.
பூமியில் வந்து விழுவது சிறியதாக இருந்தால் விண்கல் என்றும் குன்று அளவுக்குப் பெரிதாக இருந்தால் அஸ்டிராய்ட் என்றும் விஞ்ஞானிகள் வகைப்படுத்தியுள்ளனர். விண் கற்களில் பலவும் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்தவுடன் மிகுந்த அளவுக்கு சூடேறி பல சமயங்களிலும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிடும். சில சமயங்களில் அழியாமல் விண்கல்லின் பகுதிகள் கீழே வந்து விழும்.
ஒரு விண்கல் முற்றிலும் பாறையாக இருக்கலாம். சில விண்கற்கள் அதிக அளவில் இரும்பு அடங்கிய பாறையாக இருக்கும். சுமார் 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் 10 கிலோ மீட்டர் அகலம் கொண்ட ராட்சத அஸ்டிராய்ட் பூமியைத் தாக்கியபோது அப்போது வாழ்ந்த டைனோசார் விலங்கு இனம் அடியோடு அழிந்தது. இவ்வளவு பெரிய அஸ்டிராய்ட் ஒன்று பல லட்சம் ஆண்டு களுக்கு ஒரு முறை பூமியைத் தாக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
மார்ச் மாதம் 5-ம் தேதி சுமார் 30 மீட்டர் அகலம் கொண்ட அஸ்டிராய்ட் ஒன்று பூமியை சுமார் 17 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து செல்ல இருக்கிறது. இது பூமி மீது மோத வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.