சேலம் மாவட்ட மலைப் பகுதிகளுக்கு வலசை வந்துள்ள அரிய வகை பட்டாம் பூச்சிகள், அதிகரித்துள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக, வலசைப் பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி புறப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில், கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, பாலமலை, பச்சை மலை உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இந்த மலைகளில் காணப்படும் பசுமையைத் தேடி, ஆண்டுதோறும் பறவைகள், பட்டாம் பூச்சிகள் போன்றவை அண்டை மாநிலங்களில் இருந்து வலசையாக இங்கு வந்து செல்கின்றன.
அப்படியொரு நிகழ்வாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்படும் அரிய வகை பட்டாம் பூச்சிகள், இங்குள்ள மலைப்பகுதிகளுக்கு வலசையாக வந்து செல்கின்றன. பட்டாம் பூச்சிகள் முன்கூட்டியே தங்கள் வலசைப் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்படத் தொடங்கிவிட்டன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டாம் பூச்சிகளின் வலசைப் பயணத்தை கூர்ந்து கவனித்து வருபவரான சேலம் இயற்கை கழகத்தைச் சேர்ந்த கோகுல் இது குறித்து மேலும் கூறியதாவது:
”அரிய வகை பட்டாம் பூச்சிகள் சேலம் மாவட்ட மலைப்பகுதிகளுக்கு வலசையாக வந்து செல்வதை, பட்டாம் பூச்சி ஆர்வலர்களான சேலத்தை சேர்ந்த இளவரசன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நாங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனித்து வருகிறோம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காமன் க்ரவ் (common crow), டபுள் பிராண்டட் க்ரவ் (Double branded crow), ப்ளூ டைகர்ஸ் (Blue Tigers), எமிக்ரன்ட்ஸ் (Emigrants), லைம் (lime) உள்ளிட்ட அரிய வகை பட்டாம் பூச்சிகள் காணப்படும்.
தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கனமழை பெய்யும் என்பதால், அதற்கு முன்பாக ஏப்ரலில் தொடங்கி ஜூன் மாதத்துக்குள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை விட்டு கூட்டம் கூட்டமாக வலசை புறப்படும் அரிய பட்டாம் பூச்சிகள் புறப்பட்டு, கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கு வந்தடைந்துவிடும்.
பின்னர், கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், வட கிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னர், இங்கு வலசைப் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் தொடங்கி அக்டோபருக்குள், மீண்டும் வலசைப் பயணத்தை தொடங்கி தங்கள் வாழ்விடமான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு மீண்டும் சென்றுவிடும். இது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு சேர்வராயன் மலை, கல்வராயன் மலை உள்ளிட்ட இடங்களுக்கு வலசை வந்த பட்டாம் பூச்சிகள், முன்கூட்டியே வலசையை முடித்துக் கொண்டு, அதாவது ஜூலை மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்தில் சென்றுவிட்டன. அதுபோல, தற்போதும் அரிய வகை பட்டாம் பூச்சிகள் சேலம் மாவட்ட மலைப்பகுதிகளில் இருந்து தங்கள் வாழ்விடத்தை நோக்கி, மீண்டும் வலசைப் பயணத்தை தொடங்கியுள்ளதைக் காண முடிகிறது.
இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை சராசரிக்கும் கூடுதலாக பெய்தது. குறிப்பாக, மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது.
தற்போதும், கடந்த ஆண்டு போல, ஏற்காடு உள்ளிட்ட மலைகளில் கனமழை பெய்துள்ளது. எனவே, அடிக்கடி தொடரும் கனமழை காரணமாக, அரிய வகை பட்டாம் பூச்சிகள், முன்கூட்டிய தங்கள் வலசையை முடித்துக் கொண்டு புறப்பட்டுள்ளன.
ஏற்காடு மலைச்சாரலில் இருந்து தென்மேற்கு திசையில் அவை வலசை செல்வதை கண்டறிந்துள்ளோம். கூட்டம் கூட்டமாக செல்லும் பட்டாம் பூச்சிகள், ஆங்காங்கே அதிவேக வாகனங்களில் சிக்கி, உயிரிழப்பதையும் காண முடிந்தது. குறிப்பாக, சேலம்- பெங்களூரு சாலையை ஒட்டிய பகுதிகளில், அதிவேக வாகனங்களில் சிக்கி பல பட்டாம் பூச்சிகள் இறந்து கிடக்கின்றன. பட்டாம் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக தென்படும் இடங்களில் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து, வாகனத்தை இயக்கினால், பட்டாம் பூச்சிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்” என்றார்.
அரிய வகை பட்டாம் பூச்சிகள் சேலம் மாவட்ட மலைப்பகுதிகளுக்கு வலசையாக வந்து செல்வது இயற்கை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தென்மேற்குப் பருவமழை சேலம் மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக சராசரிக்கும் கூடுதலாக பெய்து வருவது, சுற்றுச்சூழல் இங்கு மேம்பட்டு வருவதை உணர்த்துகிறது.
சேலம் மாவட்டத்தில் ஜூலை மாதம் முடிய வரை பெய்ய வேண்டிய இயல்பாக மழையளவு 348.30 மிமீ., ஆகும். அதில் ஜூலை 20-ம் தேதி வரை மாவட்டத்தில் 412.40 மிமீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.