தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில் லாரிகளுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது என தெரிவிக்கப்பட்டதை பார்த்ததும் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், வரி உயர்த்தம் எண்ணம் இருந்தால் அதனை அரசு கைவிட வேண்டும், என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி பேசினார்.
நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவரும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளருமான வாங்கிலி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் லாரிகள், ட்ரெய்லர் லாரிகள், டேங்கர் மற்றும் மினி லாரிகள், சரக்கு ஆட்டோக்கள் என சுமார் 12 லட்சம் சரக்கு வாகனங்கள் உள்ளன.
மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாக நாள்தோறும் டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வந்துள்ளது. நாள்தோறும் டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப லாரி வாடகையை உயர்த்த முடியவில்லை. தவிர, தேசிய நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம், இன்சூரன்ஸ் பிரிமியம் போன்றவையும் உயர்த்தப்பட்டன.
கடந்த 17 மாதங்களாக நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் லாரிகளுக்கு போதிய சரக்கு லோடு கிடைக்காமல், பல லாரிகள் ஆங்காங்கு காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழிலில் தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தால் லாரிகளுக்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கான இஎம்ஐ செலுத்த முடியவில்லை.
பல இடங்களில் நிதி நிறுவனத்தினர் கடனுக்காக லாரிகளை பறிமுதல் செய்து நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 25 சதவீத லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து தங்களின் லாரிகளை இயக்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேறி சென்றுவிட்டனர்.தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவகங்களில் லாரிகளுக்கான கட்டணம், வரி போன்றவற்றால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.5,624 கோடி தமிழக அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
இது தவிர மாநில எல்லைகளில் உள்ள ஆர்டிஓ செக்போஸ்ட்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.328 கோடி வருவாய் கிடைக்கிறது. மாநிலம் முழுவதும் இந்த துறைக்கு ஆண்டுக்கு ரூ.344 கோடி மட்டுமே செலவாகிறது. மீதமுள்ள பணம் மொத்தமும் அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது. இது தவிர லாரி மற்றும் ஆட்டோமொபைல் பொருட்கள் வாங்கும்போது லாரி உரிமையாளர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
இச்சூழலில் தமிழக நிதியமைமச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தமிழகத்தில் லாரிகளுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதைப் பார்த்ததும் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. லாரிகளுக்கான வரியை உயர்த்துவதற்கு அவர் ஏற்பாடுகள் செய்து வருவதாக நாங்கள் பயப்படுகிறோம்.
லாரித் தொழில் நலிவடைந்து வரும் தற்போதைய சூழலில் தமிழக அரசு லாரிகளுக்கான வரியை உயர்த்தினால், இத்ததொழில் மேலும் பாதிக்கப்பட்டு, பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் இத்தொழிலைவிட்டு வெளியேறும் அபாயம் உருவாகிவிடும். இதனால் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கி வரும் சரக்குப்போக்குவரத்து தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்படும். எனவே தமிழக அரசு லாரிகளுக்கான வரியை உயர்த்தும் எண்ணத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
கடந்த மாதம் நாமக்கல்லில் நடைபெற்ற தென்னிந்திய மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பில் (சிம்டா), மத்திய, மாநில அரசுகள் ஆக.,9ம் தேதிக்குள் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்துப்பேசி, கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும், இல்லாவிட்டால் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்படும் என்று கெடு விதித்திருந்தோம்.
இதுவரை எந்த அரசும் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. எனவே விரைவில் தென்மண்டல மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் கூட்டத்தைக் கூட்டி ஏற்கனவே இயற்றியுள்ள தீர்மானத்தின் பேரில் ஸ்டிரைக் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.
நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன், துணைத்தலைவர் பாலசுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.