அதிமுக ஆட்சியில் அதிக விலை கொடுத்து மருத்துவ உபகரணங்கள் வாங்கியவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை, மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டம் குறித்து மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியுடன் சென்று நேற்று (ஆக.10) ஆய்வு செய்தார்.
பின்னர், கீரனூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ''கர்ப்பிணிகளுக்குத் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் (60%) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக் காலத்தில் இறந்தவர்களில் 60 சதவீதம் பேர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
இத்தகைய இறப்பைத் தடுப்பதற்காகவே மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கிய 3 நாட்களில் 25,617 பேர் பயனடைந்துள்ளனர்.
திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு 230 மெட்ரிக் டன் அளவில்தான் ஆக்சிஜன் இருந்தது. தற்போது 1,000 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. கரோனா 3-வது அலை வரக்கூடாது. வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது'' என்றார்.
பின்னர், 'நீட் தேர்வு நடவடிக்கை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா' என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ”பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.
இதைத் தொடர்ந்து, திருமயம் அருகே லெம்பலக்குடி, ஊனையூரில் மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த ஆட்சியில் மருத்துவ உபகரணங்கள் 2, 3 மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனச் செய்தியாளர்களிடம் கூறினார்.