பொள்ளாச்சி அருகே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சகோதரரின் நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்பந்த திட்டப் பணிகள் கொடுக்கப்படுவதாகவும், மற்ற ஒப்பந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவுக்கு வந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர், ஊழல்களில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடமும், மாநகராட்சி ஆணையரிடமும் சமீபத்தில் புகார் அளித்தார். தவிர, அதிமுக ஆட்சியில் ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாக கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்துவிட்டதாக, கோவையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரும் சென்னை மாநகர போலீஸில் நேற்று புகார் அளித்தார்.
ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று எஸ்.பி.வேலுமணி, அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் பகுதியில் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் நெருங்கிய நண்பர் திருமலைசாமி என்பவர் வசித்து வருகிறார். அவரது மளிகைக் கடை மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் காலை 6 மணியில் இருந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டுக்கு வெளியே காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.