டெல்லியில் நடந்த இந்திய ஆணழகன் போட்டியில் சென்னை சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவர் கவுஷிக் ராம், ‘மிஸ்டர் இந்தியா’, ‘மிஸ்டர் தமிழ்நாடு’ ஆகிய 2 பட்டங்களையும் பெற்று வெற்றிக் கோப்பையை தட்டிச்சென்றார்.
டெல்லி ஆக்ராவில் உள்ள ரெட் ட்ரீட் ஓட்டலில் ‘இந்திய ஆணழகன் - 2021’ போட்டி, ‘ஸ்டார்’ லைப் என்ற அமைப்பின் மூலம் கடந்த வாரம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதில் 100 பேர் தகுதி பெற்றனர்.
முதல் சுற்றில், ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டத்தைசென்னை சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவர் கவுஷிக் ராம் தட்டிச்சென்றார். அடுத்ததாக 5 நாட்கள் நடந்த உடல்தகுதி, நடையலங்காரம், நவநாகரீகம், அறிவுசார்ந்த பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்தல் போன்ற வெவ்வேறு திறன் சார்ந்த போட்டிகளிலும் கவுஷிக் ராம் வெற்றி பெற்று, ‘ஸ்டார் லைப் மிஸ்டர் இந்தியா - 2021’ பட்டத்தையும் தட்டிச்சென்றார். இதன்மூலம் ஒரே நேரத்தில் ‘மிஸ்டர்தமிழ்நாடு’, ‘மிஸ்டர் இந்தியா’ ஆகிய பட்டங்களை தமிழகத்தின் கவுஷிக் ராம் பெற்றுள்ளார். இவரது தாய், தந்தை ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் புகழ்பெற்ற ஸ்டைலிஸ்ட் ஹர்ஷ்குலார் பெஷன், முன்னாள் ‘மிஸ்டர் இந்தியா’ தரம் சாவ்லானி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, கவுஷிக் ராமுக்கு வெற்றிக் கோப்பையை வழங்கி சிறப்பித்தனர்.
பிரபல பேஷன் டிசைனர் கிசர் ஹுசைன் வழிகாட்டலில், நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் திறமையான போட்டியாளர்களை ரன்வே மாடல் சாக்ஷி தீட்சித் கண்டறிந்தார். இதேபோல, ‘மிஸ் இந்தியா - 2021’ ஆக வர்ஷா டோங்கரேவும், 2-வது இடத்தை ராஜ் கிஷோர், நேகா சவுகான் ஆகியோரும், 3-வது இடத்தை அதர்வ், அஞ்சலி சர்மா ஆகியோரும் பெற்றுள்ளனர்.