ஆவின் பால் அட்டைதாரர்களிடம் தனி நபர் விவரங்கள் கேட்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 3குறைக்கப்பட்டது. அதன்படி பால்அட்டை மூலம் பால் வாங்குபவர்களுக்கு லிட்டர் ரூ.37 விலையிலும், தினசரி பணம் கொடுத்து வாங்குவோருக்கு லிட்டர் ரூ.40விலையிலும் பால் விற்பனைசெய்யப்படுகிறது. அனைத்துவகையான பால் பாக்கெட்டிலும்அட்டை மூலம் பால் வாங்குவோருக்கும், மற்றவர்களுக்கும்3 ரூபாய் வித்தியாசம் உள்ளது.
இந்த சூழலில், அட்டை மூலம் பால் வாங்குவோரிடம் இருந்து பெயர், முகவரி, கல்வித் தகுதி, தொழில், மாத சம்பளம், குடும்ப உறுப்பினர்கள், எவ்வளவு காலமாக பால் வாங்கப்படுகிறது, ஆதார் எண், குடும்ப அட்டை எண்,வருமான வரி நிரந்தர கணக்கு எண், ஓட்டுநர் உரிமம் எண், வங்கிக்கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றில் ஒன்று போன்ற விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை ஆவின் நிர்வாகம் கோரியுள்ளதாகசெய்திகள் வந்துள்ளன.
என்ன காரணத்துக்காக பால்அட்டைதாரர்களிடம் இருந்து தனிநபர் விவரங்கள் கேட்கப்படுகின்றன என்பதை ஆவின் நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும். தனிநபர் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக பால் அட்டைதாரர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டதால், அந்த இழப்பை ஓரளவு ஈடுசெய்ய, பால்அட்டைதாரர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆவின் நிர்வாகம் இதுபோன்ற மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறதோ என்ற எண்ணம் பால் அட்டைதாரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உண்மையாக இருந்தால் இந்தநடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.
முதல்வர் ஸ்டாலின் இதில் தனி கவனம் செலுத்தி ஆவின் நிர்வாகம் எதற்காக தனிநபர் விவரங்களை கோருகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கேட்கும் அனைவருக்கும் பால் அட்டை தரப்படவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.