சென்னையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்க மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றும் பணிகளும், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, மாநகரில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பையை அகற்ற மாதந்தோறும் ஒருவார காலத்துக்கு தீவிர தூய்மைப்பணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகரில் அரசு மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அப்புறப்படுத்துதல் மற்றும் சுவர்களில் வரையப்பட்டுள்ள தனியார் விளம்பரங்களை அழித்து, அவ்விடங்களில் வண்ண ஓவியங்களை வரைவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள் குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் அடிப்படையில் இதுவரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24,384 இடங்களில் ஒரு லட்சத்து 420 சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளன. இதில் வடக்கு வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7,498 இடங்களில் 25,403 சுவரொட்டிகளும் மத்திய வட்டாரத்தில் 7,883 இடங்களில் 31,263 சுவரொட்டிகளும் தெற்கு வட்டாரத்தில் 9,003 இடங்களில் 43,754 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.