அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, திமுகவில் இணைந்து, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூரில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பின்னர், அவருக்கு மின் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக ஆட்சியின்போது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி மீது, கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
முன்னதாக, செந்தில் பாலாஜி வீட்டில் சோதனையிட்ட மத்திய குற்றப் பிரிவினர், சொத்து ஆவணங்கள், தங்க நகைகளின் ரசீதுகள், ஆபரணங்கள், வேலை வாங்கித் தருவதாகத் கூறி பல்வேறு நபர்களிடம் பெறப்பட்ட சுயவிவரக் குறிப்புகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த 8-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்காததாலும், பணத்தை திருப்பித் தந்துவிட்டதாக குற்றம் சுமத்தியவர்கள் கூறியதாலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கப் பிரிவினர் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையிலும், அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையிலும் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாக அமலாக்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்த விசாரணைக்கு வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.