மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கழிவுநீர் தேங்கி இருப்பதாக வந்த புகாரையடுத்து நேற்று காலை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு குன்றத்தூர் - மாங்காடு சாலையையொட்டி கோயிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் கழிவுநீர் முழுவதும் கலந்து இருப்பதால் அதனை சீரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, இணை ஆணையர் கே.ரேணுகாதேவி மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: மாங்காடு கோயிலுக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் கடந்த காலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் கழிவுநீர், குளம் போல் தேங்கியுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் கடிதங்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தக் கழிவுநீரை அகற்றுவது குறித்து 2017-ம் ஆண்டு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்த கால்வாயில் விடுவது குறித்து மதிப்பீடுகள் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், போதிய நிதி ஆதாரம் இல்லாததால் தற்போது வரை பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனை மறு மதிப்பீடு செய்து பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புதிய பேருந்து நிலையம், பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.