போன் செய்தால் பெட்ரோல், டீசல் வீடு தேடி வரும் திட்டம் தேனி மாவட்டத்தில் தொடங்கப் பட்டுள்ளது. 10 கி.மீ. வரை சேவைக் கட்டணம் இன்றி விநியோகம் செய்யப்படுகிறது.
வயல்களில் டிராக்டர், கட்டுமானப் பணியின்போது மண் அள்ளும் இயந்திரம் போன்றவற்றில் எரிபொருள் தீர்ந்து விட்டால் வேலை பாதிக்கிறது. மேலும் அலைந்து திரிந்து பெட்ரோல், டீசலை வாங்கி வர வேண்டி உள்ளது.
அதேபோல் திருமண மண்டபத்தில் ஜெனரேட்டர், இரவு நேரங்களில் கிராமச் சாலைகளில் பெட்ரோல் தீர்ந்து பரிதவிக்கும் வாகனங்கள் என்று வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு சிரமம் ஏற்படுகிறது.
மேலும் கேன்களில் பெட்ரோல், டீசலை வாங்கிச் செல்லவும் போலீஸ் தடை உள்ளது. இதுபோன்ற நிலையைத் தவிர்க்க தேனி மாவட்டம், கோம்பையில் கேன்கள் மூலம் பெட்ரோல், டீசலை நேரடியாக விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பண்ணைப்புரம் சாலையில் உள்ள பாரத் பெட்ரோலியம் பங்க்கில், கடந்த 8-ம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக ஜெர்ரி கேன் எனும் தனித்துவமான கேன் பயன்படுத்தப்படுகிறது. கீழே விழுந்தாலும் வாகனம் இதன் மீது ஏறினாலும் உடையாத வலுவான ஸ்டீல் இழைகளின் பிணைப்பால் இது தயாரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இந்த வகையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் மொய்தீன் அப்துல்காதர் கூறும்போது, பெட்ரோல், டீசலை சாதாரண கேன்களில் வாங்கிச் செல்வது சட்ட விரோதமாகும். இது போன்ற நிலையைத் தவிர்ப் பதற்காக, தமிழகத்தில் முதல் முறையாக இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
94439 26593 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொண்டால், நேரடியாக சென்று விநியோகம் செய்கிறோம். குறைந்தது 20 லிட்டர் கேனில் எரிபொருள் வழங்குகிறோம். பங்க்கில் விற்பனை செய்யும் கட்டணம்தான் பெறப்படுகிறது. 10 கி.மீ. வரை கொண்டு செல்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை.
அதற்கு மேல் இருந்தால் ரூ.50 சேவைக் கட்டணம் பெறுகிறோம். இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.