தமிழகம்

என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்: திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

நான் இந்த வருடம் பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை. சென்னை உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''என் மீது பேரன்பு கொண்ட கழகத் தோழர்களும் இளைஞரணியினரும் மார்ச் 1-ம் தேதி என்னுடைய பிறந்த நாள் என்பதால் இப்போதே அதற்கான விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்து வருவதை அறிகிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் இது போல கழகத் தோழர்கள் எனது பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்யும் போது, ஆடம்பர நிகழ்ச்சிகள் கூடாது என்பதையும் குறிப்பாக பேனர்கள்-கட் அவுட்டுகள்- போஸ்டர்கள் போன்ற விளம்பரங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, பொதுமக்களுக்குப் பயன் தரும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாக்களாக நடத்தும்படி கேட்டுக் கொள்வது என் வழக்கமாக இருக்கிறது. கழகத் தொண்டர்களும் இளைஞரணியினரும் அதனைக் கடைபிடித்து மக்களுக்கான ஆக்கபூர்வப் பணிகளை மேற்கொள்ளும் வழக்கத்தைக் கடைபிடித்து வருகின்றனர்.

ஆனால், இந்த ஆண்டு மழை வெள்ளத்தாலும், அதிமுக உருவாக்கிய செயற்கை பேரிடர் பாதிப்பாலும் தங்கள் உடமைகளை இழந்து, தொழில் நஷ்டம் ஏற்பட்டு, பல நூறு பேர் உயிரிழந்த சூழல் என்னை மிகவும் பாதித்து விட்டது. ஆகவே, நான் இந்த வருடம் பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை. எனவே, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், சென்னை உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை இன்னும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கழக தோழர்கள் ஒவ்வொருவரும் வீடு வீடாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களிடம் செயல்படாத ஜெயலலிதா அரசின் 5 ஆண்டுகால அவலத்தை விளக்கும் துண்டறிக்கைகளை வழங்கி, கழகமே தமிழக மக்களின் காவல் அரண் என்பதை எடுத்துச் சொல்லவேண்டும். மாநிலத்தின் வளர்ச்சியை வீழ்ச்சியடையச் செய்து, இன்றைக்கு இந்தியாவின் கடைசி மாநிலமாக தமிழகத்தை ஆக்கி விட்ட அதிமுகவின் சீரழிந்த நிர்வாகத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து கழகத்திற்கு ஆதரவு திரட்டுவதே, என் மீது பேரன்பு கொண்டுள்ள கழகத் தொண்டர்களும் இளைஞரணியினரும் வழங்கும் அன்புப் பரிசாகும்.

அந்தப் பரிசை நீங்கள் அள்ளி வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பிறந்த நாள் அன்று நான் சென்னையில் இருக்கப் போவதில்லை என்பதால் கழகத் தோழர்கள் யாரும் என்னை சந்திக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும் தத்தம் பகுதிகளில் நான் கேட்டு கொண்டவாறு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT