தமிழகத்துக்கு ஜிஎஸ்டி வரி பாக்கி ரூ.20,033 கோடியை மத்திய அரசு தர வேண்டியுள்ளது என, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
"வரியே இல்லையென்றால் அரசாங்கம் எப்படி நடக்கும்? சரியான வரியைச் சரியான நபர்களிடம் சரியான அளவில் எடுத்து, பொதுப் பொருட்கள், சேவைகளுக்குப் பயன்படுத்தி, வளர்ச்சிப் பாதைக்குச் செலுத்தி சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கான திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
பூஜ்ஜிய வரி என்பது அர்த்தமில்லாதது. சரியான வரியை வசூலித்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்த வேண்டும். ஜீரோ வரியில் பயனடைவது சாதாரண மக்கள் இல்லை. வரி இல்லை என்றால் பணக்காரர்களே பயனடைவார்கள். பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு மட்டுமே ஜீரோ வரி முறை பயன் தருகிறது. அரசிடம் வராத வரி வருவாய் பெரும் பணக்காரர்களிடம் தேங்கியுள்ளது. எனவே, வரியை முறையாக வசூலிப்பது அவசியம்.
மதுபான வருவாய், கலால் வரியாக எடுக்காமல் வாட் வரியாக எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் வருவாய் சரிவு ஏற்பட்டுள்ளது. வருமானத்தைவிட அதிகமாக 2 அல்லது 3% கடன் வாங்கும் அளவுக்கு முந்தைய காலத்தின் நிதி நிலைமை இருந்தது. வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்கவே கடன் வாங்கும் நிலை தற்போது உள்ளது.
மத்திய அரசிடம் இருந்து வந்துகொண்டிருந்த வருவாய் 33% குறைந்துள்ளது. வரி அல்லது வருமானம் முந்தைய திமுக ஆட்சியில் 1% ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 0.7% ஆகக் குறைந்தது.
தமிழகத்துக்கு ஜிஎஸ்டி வரி பாக்கி ரூ.20,033 கோடியை மத்திய அரசு தர வேண்டியுள்ளது.
தமிழக அரசு மானியங்களுக்கு அதிகமாகச் செலவிடும் நிலையில், பயனாளிகள் யார் யார் என்பது பற்றிய விவரம் இல்லை. மானியம் பெறுபவர்களை அடையாளம் கண்டு முறைப்படுத்த தெளிவான திட்டம் வகுக்கப்படும்.
தமிழக அரசு ஒரு நாளைக்கு கடனுக்காக ரூ.87.31 கோடி வட்டி செலுத்துகிறது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை. வரியை உயர்த்தாததால் பணக்காரர்களுக்கே பலன் கிடைத்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் விவரங்களின் அடிப்படையில் மானியம் பெறுபவர்கள் முறைப்படுத்தப்படுவார்கள்.
கடன் வாங்கி செய்யப்படும் முதலீடு மூலம் கிடைக்கும் வருவாய் பங்கு 0.45% ஆக மட்டுமே உள்ளது. மின்துறையில் இழப்பு திமுக ஆட்சியில் ரூ.34 ஆயிரம் கோடியாக இருந்தது. அதிமுக ஆட்சியில் கரோனாவுக்கு முன்பே ரூ.1.34 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
பொறுப்புள்ள அரசு, வளர்ச்சிக்கும் சமூக நீதிக்கும் உதவ வேண்டும். பொதுத்துறை நிறுவன முதலீட்டுக்காக வாங்கும் கடனுக்கு 8.08% வட்டி செலுத்தப்படுகிறது. கடன் வாங்கி முதலீடு செய்வதில் வருவாய் பங்கு 0.45% ஆக மட்டுமே உள்ளது.
உலகப் பொருளாதார நெருக்கடி வந்தால் தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்கள் அதிகம் பாதிக்கும். பண மதிப்பிழப்பு, கரோனா போன்ற காலங்களில் வளர்ந்த மாநிலங்களில் பொருளாதார பாதிப்பு குறைவாக இருக்கும். 2006-11இல் திமுக ஆட்சிக் காலத்தில் நாட்டின் வளர்ச்சி 8.62%. ஆனால், அதே ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சி 10.12% ஆக இருந்தது".
இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.