அண்ணாமலை நடத்திய போராட்டத்தால் மேகதாதுவுக்குத் தடை ஏற்படாது. ஆனால், கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் அகதிகளாக விரட்டப்படுவர் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டத்துக்குட்பட்ட சோழசிராமணி பகுதியில் ராஜா வாய்க்காலில் 42 புதிய நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் திரண்டனர். அலுவலக வளாகத்தின் பிரதான நுழைவுவாயில் முன் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, விவசாயிகள் கோரிக்கை முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, ''புதிய நீர்ப்பாசனத் திட்டங்களால் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள ராஜா வாய்க்கால் பாசன விவசாயம் அடியோடு அழியும் நிலை உருவாகும். அதேபோல், டெல்டாவில் கீழ்ப்பாசன விவசாயிகளின் உரிமை பறிபோவதுடன், கடுமையாக பாதிக்கப்படுவர்.
இறவைப் பாசனத் திட்டம் என்ற பெயரில் காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய- மிகப் பெரிய வணிக நோக்கிலான- காவிரிக் கரைகளில் புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ள 42 நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான அனுமதிகளையும் அரசு ரத்து செய்ய வேண்டும்.
கீழ்ப்பாசன விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமல் காவிரியில் புதிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. 42 நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான அனுமதியையும் அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, அடுத்தகட்டமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்துப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும்'' என்று தெரிவித்தார்.
பாஜக தஞ்சாவூரில் அண்மையில் நடத்திய போராட்டம் குறித்த கேள்விக்கு, "அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் சர்வதேச அளவில் ஐபிஎஸ் தேர்வு முறை குறித்து சந்தேகம் எழும்பியுள்ளது. மேகதாதுவுக்கு எதிராகக் கர்நாடகத்தில் போராடிய விவசாயிகள், பாஜக நடத்திய போராட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாமலை நடத்திய போராட்டத்தால் மேகதாதுவுக்குத் தடை ஏற்படாது. ஆனால், கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்படும். தமிழர்கள் அகதிகளாக விரட்டப்படுவர். இவ்வாறு நேரிட்டால் பாஜகதான் முழுப் பொறுப்பு" என்று தெரிவித்தார்.