மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனிதர்கள் - யானைகள் இடையே மோதலைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர், கீழ்க்காணும் கேள்விகளுக்கு விளக்கம் தருவாரா?
1. அண்மைக்காலமாக, மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே பெருகி வருகின்ற மோதல்களைத் தடுக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? குறிப்பாகத் தமிழ்நாட்டில்;
2. அவ்வாறு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு மோதல்கள் தணிக்கப்பட்டுள்ளன?
3. மனிதர்கள், யானைகள் மோதலுக்கும், பயிர்ச் சேதங்களுக்கும், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளுக்குமான காரணங்கள் குறித்து, அரசு ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டதா?
அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்;
4. யானைகள் தாக்கி எத்தனை பேர் இறந்துள்ளனர்?'' ஆகிய கேள்விகளை வைகோ எழுப்பினார்.
இதுகுறித்துத் துறை இணை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அளித்த விளக்கம்:
''உறுப்பினரின் கேள்விகளுக்கான விளக்கங்களை, அறிக்கையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கின்றேன்.
1. காட்டு விலங்குகளைப் பராமரிப்பதும், யானைகள், மனிதர்களுக்கு இடையே மோதல்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடி ஆட்சிக்கு உட்டபட்ட அரசுகளின் பொறுப்பு ஆகும்.
தமிழ்நாடு அரசு கீழ்க்காணும் விளக்கங்களை அளித்து இருக்கின்றது;
அ) மனிதர்கள் வாழ்கின்ற பகுதிகளுக்கு உள்ளே யானைகள் வருவதைத் தடுக்க, அகழிகள் வெட்டுதல், சூரிய மின்வேலிகள் அமைத்தல், தடுப்புச் சுவர் கட்டுதல், யானைகளைத் திரும்பவும் காட்டுக்கு உள்ளே அனுப்புவதற்கான நடவடிக்கைகள், குடிநீர்த் துளைகள் உருவாக்குதல், எல்லைகள் வரையறுத்தல் போன்ற நடவடிக்கைகள்.
ஆ) மேற்கண்ட செயல்பாடுகளில் தொய்வு ஏற்படாமல் கண்காணித்தல், மின்வேலிகளைப் பராமரித்தல்.
இ) 1972 காட்டு விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்ட உழவர்களுக்கு மின் இணைப்புகளைத் துண்டித்தல்.
ஈ) காட்டு விலங்குகளுக்கு நஞ்சு வைப்பது, அவற்றைச் சீண்டுவது போன்ற நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
மேற்கண்ட நடவடிக்கைகளுடன் கூடுதலாக, துறை அமைச்சகம் கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
அ) யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்,( Project Elephant) யானைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசு நிதி உதவிகள் வழங்குகின்றது.
ஆ) யானைகளுக்குக் குடிநீர் கிடைப்பதற்கான ஏற்பாடுகள், அவற்றின் தீவனங்களுக்காக மரங்கள் வளர்த்தல், மூங்கில் காடுகளை வளர்த்தல் போன்ற பல பணிகளை, மத்திய அரசு மேற்கொள்கின்றது. காட்டு விலங்குகள் மற்றும் புலிகளின் வாழிடங்களைப் பெருக்குவதற்காக மேற்கண்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட காடு வளர்ப்பதற்கான நிதிச் சட்டத்தில், அந்த நிதியை, யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் வாழிடங்களைப் பெருக்குவது, விலங்குகள் காப்பகங்கள் அமைப்பதற்குப் பயன்படுத்துகின்றோம்.
இ) மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்களைத் தவிர்ப்பதற்காக, 2017ஆம் ஆண்டு, அக்டோபர் 6ஆம் நாள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. யானைகள் உலவும் மாநிலங்களின் அரசுகள், அவற்றைப் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஈ) யானைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதற்கும், மோதலைத் தவிர்ப்பதற்கும், யானைகளின் வாழ்விடங்கள், காப்பகமாக அறிவிக்கப்படுகின்றன. இதற்கென வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் உலவுகின்ற 14 மாநிலங்களில், 30 யானைகள் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
5. யானைகளின் தாக்குதலால் உடைமைகளை இழந்தவர்கள், உயிர்களை இழந்தவர்களின் குடும்பத்தினர் எதிர் நடவடிக்கைகளில் இறங்குவதைத் தடுப்பதற்காக, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகின்றது. மேலும், சூறையாடப்பட்ட சொத்துகளுக்கான பரிவுத்தொகை வழங்கப்படுகின்றது. (Letter No. 14-2/2011 WL-I(Part) dated 9.2.2018).
3,4 ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
யானைகள், மனிதர்கள் இடையேயான மோதல்கள் குறித்து, கீழ்க்காணும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
1. ஆசிய யானைகளின் எண்ணிக்கை மற்றும் மனிதர்கள் வாழிடங்களில் தனி விலங்குகளின் நடமாட்ட நிலை கண்காணிப்புத் திட்டத்தின்கீழ், காவிரி வடக்கு விலங்குகள் வாழிடம் மற்றும் ஓசூர் - தர்மபுரி பகுதிகளில், 6 யானைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டன.
2. கர்நாடக அரசு வழங்கிய தகவலின்படி, கர்நாடகா யானைகள் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தங்களது அறிக்கையை, 2012ஆம் ஆண்டு வழங்கியது. யானைகளின் வாழ்விடங்களைத் துண்டாக்குதல், வாழ்விட இழப்பு, பயிர்ச்சேதங்கள் போன்றவைதான், யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல்கள் நிகழ்வதற்குக் காரணங்கள் என அந்த அறிக்கை கூறுகின்றது.
சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கான அமைச்சகம் நிதி அளிப்பில், மனித நடமாட்டம் மிகுந்த மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதிகளில் சூழல்களை மாற்றுவதில், மனிதர்கள் - யானைகள் மோதல்கள் இடம் சார்ந்த வடிவங்களின் மதிப்பீடு மற்றும் கணிப்புகள் குறித்த ஆய்வுகள், தேசிய இமயமலை ஆய்வுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
அதன்கீழ்,
1. இடம் சார்ந்த காரணங்கள் மற்றும் மோதல்களுக்குக் காரணமான இயற்கை மாற்றங்கள்.
2. யானைகளின் கோபத்தைத் தூண்டும் வகையிலான மனிதர்களின் நடவடிக்கைகள்.
3. அடிக்கடி மோதல்கள் நிகழும் இடங்களை அடையாளம் காணுதல்
4. நிலப் பயன்பாடு மற்றும் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள்
ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளில் இறந்த யானைகள் மற்றும் மனிதர்களின் கணக்கு.
2018-19 யானைகள் 115 ; மனிதர்கள் 457
2019-20 யானைகள் 99 ; மனிதர்கள் 585
2020-21 யானைகள் 87; மனிதர்கள் 359''.
இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பூபேந்தர் யாதவ் விளக்கம் அளித்துள்ளதாக மதிமுக தெரிவித்துள்ளது.