தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் சுமை உள்ளது என, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆக. 09) காலை 11.30 மணியளவில் சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
"கடன் வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதி நிலைமை சரிந்துவிட்டது. கரோனா ஆரம்பிப்பதற்கு முன்பே வருமானம் சரிந்துவிட்டது. வருவாய் பற்றாக்குறை இப்படி இருப்பதால், நிதி பற்றாக்குறை கட்டாயம் அதிகரிக்கும். தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.92,305 கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் கடனைச் செலுத்தும் தன்மை குறைந்ததால், வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. மின்வாரியத்தின் கடனைத் திருப்பிச் செலுத்தும் தன்மை குறைந்து வட்டி அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் தாக்கல் செய்த இடைநிதிநிலை அறிக்கையில், தமிழக அரசுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி பொது சந்தா கடன் உள்ளது.
தமிழகத்தில் புள்ளிவிவரங்களின்படி, 2 கோடியே 16 லட்சத்து 24,238 குடும்பங்கள் எனக் கொண்டால், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் உள்ளது".
இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.