தமிழகம்

வெளிநாட்டு வேலை: ரூ.80 லட்சம் மோசடி - ஆந்திர இளைஞர்கள் எஸ்பியிடம் புகார்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல் பட்டு அடுத்த வீராபுரம் மகேந்திரா சிட்டி கட்டபொம்மன் தெரு பகுதியில் விஷ்ணு பிரதீப் என்பவர் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று நடத்தி வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள பன்னாட்டு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆந்திர மாநில இளைஞர்களை தொடர்பு கொண்டு, வெளிநாட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வாங்கித் தருவதாக கூறியதாக தெரிகிறது.

பணிக்கு தேர்வு செய்வதற்கு முன்னதாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்றும், முன் பணமாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை தருவதோடு, பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும் என விஷ்ணுபிரதீப் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதை நம்பி, ஆந்திராவைச் சேர்ந்த 92 இளைஞர்கள் கடந்த மாதம் ரூ.68 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான பணம் மற்றும் பாஸ்போர்ட்டை தந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பணத்தை பெற்று கொண்ட விஷ்ணு பிரதீப் திடீரென தலைமறைவாகி விட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தரசியிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து, மனு அளித்த இளைஞர்கள் கூறியதாவது: கடந்த மாதம் பணம் மற்றும் பாஸ் போர்ட்டை பெற்று கொண்ட விஷ்ணு பிரதீப், ‘பிப். 17-ல் அனைவருக்கும் விசா வந்துவிடும். அனைவரும் அன்றையதினம் அலுவலகத்துக்கு நேரில் வந்து விசாவை பெறுமாறு’ கூறியிருந்தார்.

அவர் கூறிய தேதியில் அலு வலகத்துக்கு சென்றோம். அங்கு அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால், அனைவரும் சேர்ந்து எஸ்பியிடம் மனு அளித்தோம். மனுவை பெற்று கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். எங்களது பாஸ்போர்ட் மூலம் சமூக விரோத செயல்களில ஈடுபட வாய்ப்புள்ளதால், அவற்றை முடக்க வேண்டும் என தெரிவித் துள்ளோம் என்று அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT