சிறுமி மித்ரா 
தமிழகம்

தசைநார் சிதைவு நோயால் பாதித்த சிறுமிக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது

செய்திப்பிரிவு

தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குமாரபாளையம் சிறுமிக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி பெங்களூரு மருத்துவமனையில் போடப்பட்டது என சிறுமியின் தந்தை சதீஸ்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

எங்களது மகள் மித்ரா (2) தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இவரது சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் ஊசி மருந்து தேவைப்பட்டது. இதன் விலை ரூ.16 கோடியாகும். இதை இந்தியாவில் இறக்குமதி செய்ய 6 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும். பொதுமக்கள் கொடுத்த நன்கொடை மூலம் ரூ.16 கோடி சேர்ந்துவிட்டது.

வரியை ரத்து செய்த மத்திய அரசு

எனினும், இத்தொகை மருந்துக்கு சரியாக இருந்தது. இறக்குமதி வரி ரத்து செய்தால் மட்டுமே இந்த மருந்து எனது மகளுக்கு கிடைக்கும் எனும் நிலை இருந்து வந்தது. இதையடுத்து பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு இறக்குமதி வரியை ரத்து செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.

கடவுள் அருளால் இறக்குமதி வரி ரூ.6 கோடியை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மித்ராவுக்கு பெங்களுரூ மருத்துவமனையில் அந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாட்கள் சிகிச்சைக்கு பின் குமாரபாளையம் வந்து விடுவோம். எங்கள் மகள் வாழ உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT