தமிழகம்

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை போல் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்: தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததைப் போல் வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்பூந்தமல்லியில் மாநிலத் தலைவர் தீனதயாள் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லிவரவேற்புரையுடன், பொருளாளர் ருக்மாங்கதன், மகளிரணி செயலாளர் உஷா ராணி, தலைமைச் செயலாளர் ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி புதிய ஓய்வூதியம் ரத்து செய்யப்படும் என முதல்வர், நடைபெறஉள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்க வேண்டும். பள்ளி திறப்புக்கு முன் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிக்க வேண்டும். 1.4.2019 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஈட்டு விடுப்பை வழங்க வேண்டும்.

ஓய்வூதியர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி திட்டத்தின்கீழ் மாதம்தோறும் ரூ.80 செலுத்தி வருகின்றனர். ஓய்வூதியர் மரணத்துக்குப் பின் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.50,000 வழங்கப்படுகிறது. தற்போது 1.7.2021-ல் புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டு அதில் ரூ.80-ல் இருந்து ரூ.150ஆக உயர்த்தி பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் வழங்கப்படும் குடும்பபாதுகாப்பு நிதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே இதை பரிசீலித்து, வழங்கப்படும் குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.50,000 லிருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT