மக்கள் நலக் கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு தொடர்பாக சிறு நெருடலும் ஏற்படாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதிமுகவின் 24-வது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி காஜா நகரில் நேற்று நடைபெற்றது. மாநில அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் 3-ம் கட்ட பிரச்சார பயணம் வரும் மார்ச் 1-ம் தேதி திருவள்ளூர், வேலூர், 2-ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, 3-ம் தேதி சேலம், திருவண்ணாமலை, 4-ம் தேதி விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். 4-வது கட்ட பிரச்சார பயணம் தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அதிமுக, திமுகவால் ஊழலற்ற ஆட்சியைத் தர முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளை, முக்கியமான நிர்வாக பொறுப்பில் அமர்த்தி அரசியல் கட்சிகளின் தலையீடு, ஊடுருவல் இல்லாத எளிமையான, வெளிப்படையான, நேர்மையான அரசை அளிப்போம். அதிமுக, திமுக ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் மீள முடியாத நிலைக்கு ஆளாகும்.
திமுக, காங்கிரஸ் கூட்டணி கூடா நட்பாக உருவாகி இருக்கிறது. இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மக்கள் நலக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சிறு நெருடலும் வராது. இந்த நம்பிக்கையில்தான், 4 கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம். 2-ம் கட்ட பிரச்சாரம் முடிந்த பிறகு, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்துவோம். இத்தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து மதிமுகவின் உயர்நிலைக் குழுவும், ஆட்சிமன்றக் குழுவும் முடிவு செய்யும்.
அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் ஒரு கோடி ஓட்டு உள்ளது. அதிமுக, திமுக மீது கோபம் உள்ளதால் அவர்களின் ஓட்டு எங்களுக்கு கிடைக்கும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக மக்கள் நலக் கூட்டணியில் கண்காணிப்பு படைகளை அமைக்க உள்ளோம்.
பரோலில் வந்துள்ள நளினியுடன் செல்போனில் பேசினேன். அப்பாவியான அவர், 25 ஆண்டுகளாக சித்ரவதைகளை அனுபவித்து வருகிறார். சாந்தன், முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார் வைகோ.
செய்தியாளர் கூட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலா ளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.