திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்கக்கோரி செய்யாறு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழவர் பேரவை சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “செய்யாறு, வெம்பாக்கம் மற்றும் வந்தவாசி வட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படடிருந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெறுகிறது. கடந்த ஜுலை 10-ம் தேதி தொடங்கிய, இந்த பணி 3 வாரங்களில் முடிவுக்கு வந்து விடும்.
ஓர் ஏக்கருக்கு 30 மூட்டை நெல் அறுவடை என்றாலும், 12 லட்சம் நெல் மூட்டைகள் கிடைக்கும். 75 சதவீத அறுவடை பணிகள் முடிந்துவிட்டன. நெல் மூட்டைகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் 75 கிலோ நெல் மூட்டைக்கு ரூ.850 தருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அரசாங்கம் அறிவித்த ஒரு கிலோ நெல்லுக்கான ரூ.19.58 என்ற விலை கிடைக்கவில்லை.
இதனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என ஆட்சியரிடம் முறையிட்டோம்.
அவரும், 4 கிராமங்களுக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கூட திறக்கவில்லை.
தி.மலை மாவட்டத்தில் ஏற்கெனவேசெயல்பட்டு வந்த சுமார் 71 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், கடந்த ஜுலை மாத இறுதியுடன் மூடப்பட்டு விட்டன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால், ஒரு மூட்டைக்கு 600 ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகளுக்கு ரூ.60 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட் டுள்ளது. இதற்கு, மாவட்ட நிர்வாகம்தான் காரணம். விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் இருக்க தி.மலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, ஆரணி, போளூர், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக விவசாயிகள், “நெல் விலை உயிரிழந்து விட்டதாக கூறி ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தும், விலையை மீட்டெடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கல்உப்பு, வசம்பு,ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை மஞ்சள் துணியில் சுற்றி கிடங்கு வாசல்களில் கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.