காலில் விழுந்த கிராம நிர்வாக உதவியாளர். 
தமிழகம்

கிராம நிர்வாக உதவியாளரைக் காலில் விழவைத்த விவகாரம்: விவசாயி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

பெ.சீனிவாசன்

கோவை அருகே கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரைக் காலில் விழவைத்த விவகாரத்தில் தொடர்புடைய விவசாயி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் கலைச்செல்வி. அவரது உதவியாளராக அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (56) என்பவர், பணி செய்து வருகிறார்.

கடந்த 6-ம் தேதி அன்னூர் வட்டத்துக்கு உட்பட்ட கோபிராசிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபாலசாமி (38) என்பவர் தனது இடம் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்கச் சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலருக்கும் கோபாலசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்நேரத்தில் அங்கிருந்த முத்துசாமி, அரசு அதிகாரியைத் திட்டக் கூடாது என, கோபாலசாமியிடம் கண்டித்துக் கூறியுள்ளார். தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கிராம நிர்வாக அலுவலரைத் திட்டியதாக, கோபாலசாமியை முத்துசாமி கீழே தள்ளிவிட்டதாகத் தெரிகிறது. பதிலுக்கு முத்துசாமியை வேலையில் இருந்து நீக்கி விடுவதாக, கோபாலசாமி மிரட்டியதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பயந்துபோன முத்துசாமி, கோபாலசாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கோரி கதறி அழுதார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸுக்கு உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அன்னூர் வட்டாட்சியர் ரத்தினம், மேட்டுப்பாளையம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெய் சிங் உள்ளிட்டோர் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உள்ளிட்டோரை நேற்று அன்னூர் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை அடிப்படையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், இன்று (ஆக. 08) கோபாலசாமி மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 353-ன் கீழ் (அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதவியாளர் முத்துசாமி அளித்த புகாரின் பேரில், கோபாலசாமி மீது இதர பிரிவு 353, 506 (I) (மிரட்டல் விடுத்தல்) மற்றும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதேபோல், சம்பவம் தொடர்பாக கோபாலசாமி அளித்த புகாரின் மீதும் போலீஸார் தனி விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT