நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகையும், மாடலிங் துறையைச் சேர்ந்தவருமான மீரா மிதுன், தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார். அந்த வகையில், தமிழ் சினிமாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இயக்குநர்களைத் தரக்குறைவாகப் பேசி மீரா மிதுன் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையை விட்டே வெளியேற வேண்டும் என அவர் பேசினார்.
இதற்குப் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில், மீரா மிதுனின் பேச்சு தாழ்த்தப்பட்ட மக்களைக் கேவலப்படுத்தும் ஆதிக்க சாதியினரின் தூண்டுதலின்பேரில், அதே மனநிலையை பிரதிபலிக்கிறது எனவும், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்ட மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வன்னி அரசு கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் இன்று (ஆக. 08) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.