மீரா மிதுன்: கோப்புப்படம் 
தமிழகம்

மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யக் கோரி புகார்

செய்திப்பிரிவு

பட்டியலின மக்களை இழிவுபடுத்திப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது, வன்கொடுமை தடுப்புத் திருத்தச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு தீண்டாமை முன்னணி சார்பாக, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு தீண்டாமை முன்னணியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பி.சுந்தரம் இன்று (ஆக. 08) வேப்பேரி காவல் ஆணையரிடம் அளித்த மனு:

"நான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வருகிறேன். சினிமா நடிகை மற்றும் விளம்பர மாடலுமான மீரா மிதுன் என்பவர் பேசிய காணொலியை சமூக வலைதளத்தில் பார்த்தேன். அதில், பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அவர்களின் மீதான வன்செயலுக்கு அவர்களின் நடவடிக்கைகள்தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

பட்டியலின சினிமா இயக்குநர்களைப் பற்றிக் கேவலமாக, மிக மோசமான முறையிலும் பேசியுள்ளார். இது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வன்கொடுமைச் செயலாகும். எனவே, மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புத் திருத்தச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT