பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

சேலம் மாநகரில் கடைகள், மால்கள் உள்ளிட்டவை மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவு

எஸ்.விஜயகுமார்

சேலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாநகரில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள் உள்ளிட்டவை, நாளை முதல் 23-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது எனவும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று (ஆக. 07) 91 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 5 பேர் உயிரிழந்தனர். இதுவரை, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 835 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தொற்று அதிகரித்து வருவதால், நாளை (ஆக. 09) முதல் சேலம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாளை முதல் 23ஆம் தேதி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்துள்ளதாகவும், சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மத வழிபாட்டுத் தலங்களில், பொதுமக்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட து.

சேலம் மாநகரில் உள்ள மால்கள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தின் முக்கிய கால்நடைச் சந்தைகளான கொங்கணாபுரம் வாரச் சந்தை, வீரகனூர் வாரச் சந்தை ஆகிய இரண்டு சந்தைகளுக்கும், மேட்டூர் அணை பூங்கா வரும் 23-ம் தேதி வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT