தமிழகம்

கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவாக இணையவழி மாரத்தான் போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவாக, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் இணையவழி மெய்நிகர் மாரத்தான் போட்டியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, இணையவழி மெய்நிகர் மாரத்தான் போட்டி கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதில்பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இணையவழி மெய்நிகர் மாரத்தான் போட்டியின் முதல் பதிவை அவரது நினைவிடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.பின்னர், பதிவு செய்திருந்த 12 பேருக்கான ரசீதை வழங்கினார்.

ஆயிரம் பேருக்கு பணி

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமையாக இருக்கிறது. எனது தொகுதியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில், சுமார் ஆயிரம் பேருக்கு பணி உறுதி செய்யப்பட்டு அதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக இப்போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஆகஸ்ட் 31-ம்தேதி வரை இம்மாரத்தானில் பங்கேற்கலாம். உலகத்தின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே இணையதளம் (www.kalaignarmarathon.com)மூலம் பதிவு செய்து இம்மாரத்தானில் பங்கேற்க முடியும். நுழைவுக் கட்டணமாக ஒருவருக்கு ரூ.300 பெறப்படுகிறது. நுழைவுக் கட்டணமாக பெறப்படும் தொகை, கரோனா நோய்த்தடுப்பு நிவாரண நிதியாக தமிழக முதல்வரிடம் வழங்கப்படும்’’என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கணேசன், தயாநிதிமாறன் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT