தமிழகம்

பட்ஜெட் தயாரிப்பு குறித்த முதல்வர் உத்தரவு: தொழில், வணிகம், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

செய்திப்பிரிவு

தமிழக நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பாக, முதல்வர் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை சங்கங்கள், வணிகத் துறையினர், விவசாய சங்கங்களின் கருத்துகளை அமைச்சர்கள் கேட்டுவருகின்றனர்.

2021-22-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 13-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் முதல்முறையாக தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணியில் நிதி மற்றும் வேளாண் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகள், துறை வல்லுநர்கள், பல்வேறு சங்கங்களுடன் கலந்தாலோசித்து, மக்களுக்குப் பயனுள்ள வகையில் நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர்ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, வேளாண் அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் விற்பனை சங்கப் பிரதிநிதிகள், தமிழக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, கருத்துகளைக் கேட்டறிந்தார்.

இதேபோல, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிற் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளுடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனும் ஆலோசனை நடத்தினர்.

மேலும், வணிக சங்கப் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த நிகழ்வுகளில், நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன், வணிகவரி ஆணையர் எம்.ஏ.சித்திக், வணிகவரித் துறை செயலர் பி.ஜோதிநிர்மலா சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று காலை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், மாநில அளவிலான விவசாய நிபுணர்கள், வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை விவசாய நிபுணர்கள், வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT