பயணிகள் ரயில். 
தமிழகம்

வேலூர் கன்டோன்மென்ட்-சென்னை கடற்கரை வரை சாதாரண மின்சார ரயிலை எக்ஸ்பிரஸ் ரயிலாக பெயர் மாற்றி அதிக கட்டணம் வசூலிப்பு: திடீர் கட்டண உயர்வை திரும்பப்பெற பயணிகள் கோரிக்கை

வ.செந்தில்குமார்

வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை சாதாரண பயணிகள் மின்சார ரயில் கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுவால் தொடங்கி வைக்கப்பட்டது. அன்றைய நிகழ்ச்சியில் பேசிய ஆர்.வேலு, ‘இந்த பயணிகள் ரயில் சேவையில் குறைந்த கட்டணமாக ரூ.10-க்கு டிக்கெட் என்பதால் ஒரு தேநீர் விலையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது’ என பெருமையுடன் குறிப்பிட்டார். அன்று தொடங்கி கரோனா ஊரடங்கால் இந்த ரயில் சேவை நிறுத்தும் வரை குறைந்த கட்டணமாக 10 ரூபாயும் சென்னை கடற்கரைக்கு ரூ.35, அரக்கோணத்துக்கு ரூ.20, திருவள்ளூருக்கு ரூ.25 ஆக வசூலிக்கப்பட்டது.

கரோனா ஊரடங்கு தளர்வில் தற்போது சென்னையில் இருந்துஅரக்கோணம் வரை புறநகர் மின்சார ரயில் இயக்கப்பட்ட நிலையில், மெமு ரயில் என்றழைக்கப்படும் சாதாரண பயணிகள் மின்சார ரயில் சேவையில் வேலூர் கன்டோன்மென்ட் முதல் கடற்கரை வரையிலான ரயில் சேவை கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இதுவரை சாதாரண பயணிகள் மின்சார ரயிலாக இருந்ததை விரைவு ரயிலாக பெயரை மாற்றி இயக்கினர். புதிய பெயருடன் கட்டணமும் மாறிவிட்டது. இதுவரை வசூலித்த குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ. 30 ஆகவும் அரக்கோணத்துக்கு ரூ.45, திருவள்ளூருக்கு ரூ.50, கடற்கரைக்கு ரூ.65 ஆகவும் உயர்த்தி விட்டனர்.

வேலூர் கன்டோன்மென்டில் தினசரி காலை 6 மணிக்கு புறப் பட்டு 9.40 மணிக்கு கடற்கரை சென்றடையும் வழியில் 25 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயில் மீண்டும் மாலை 6 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு கன்டோன்மென்ட் வந்து சேரும். ஏழை, எளிய, கூலித் தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்திய இந்த ரயில் சேவையின் பெயரை மாற்றி அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தி.மலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் கூறும்போது, ‘‘சென்னை திருநின்றவூருக்கு எலக்ட்ரீஷியன் வேலைக்கு சென்று வருகிறேன். எனக்கு கிடைக்கும் கூலியில் இந்த ரயிலில் சென்றால்தான் கட்டுப்படியாகும். இப்போது திருநின்றவூர் செல்ல 55 ரூபாய்க்கு டிக்கெட் வாங்க வேண்டி இருக்கிறது. போய்வர 110 ரூபாய் ஆகிறது. பழைய கட்டணம் என்றால் கிடைக்கின்ற வருமானத்தில் கொஞ்சம் மிச்சமாகும்’’ என்றார்.

அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தைச் சேர்ந்த ரகுநாதன் கூறும்போது, ‘‘பெயரை மாற்றி கட்டணத்தை உயர்த்தி இருப்பது தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் அப்பட்டமான சுரண்டல் என்றே கூறலாம். ஏழை மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ரயிலின் பெயரை தெற்கு ரயில்வே நிர்வாகமே தன்னிச்சையாக மாற்றி எக்ஸ்பிரஸ் கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளனர். இதை திரும்பப்பெற வலியுறுத்தி ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT