உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கையில் ஊசி சிக்கியதால் உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவன் குடியிருப்பில் வசித்து வருபவர் சுரஜ் பகதூர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சஞ்சனா (28). சஞ்சனா 2-வது பிரசவத்துக்காக கடந்த 30-ம் தேதி உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுகப் பிரசவத்துடன் பெண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். பின்னர் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஆக.7) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்காகக் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டு இருந்த ஊசியை செவிலியர் எடுத்து உள்ளார். அப்போது ஊசி உடைந்து கையில் சிக்கி உள்ளது. இதனால் சஞ்சனா வலி தாங்க முடியாமல் கைவீக்கத்துடன் இருந்துள்ளார். இதனைக் கண்ட கணவர் சுரஜ் பகதூர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் கோவை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமெனக் கூறியதையடுத்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் வராததால் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். இதுகுறித்து உதகை பி1 போலீஸ் நிலையத்தில் சஞ்சனாவின் கணவர் புகார் அளித்ததையடுத்து, போலீஸார், இருப்பிட மருத்துவ அதிகாரி மருத்துவர் ரவிசங்கர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
சுரஜ் பகதூர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’‘எனது மனைவிக்கு பிரசவத்தை மருத்துமனையில் முடித்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது கையில் இருந்த ஊசியை எடுத்தனர். அது உடைந்து மாட்டிக் கொண்டது. மருத்துவர்கள் வராததால் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டோம். அத்தோடு, உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் பி1 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இருப்பிட மருத்துவ அதிகாரி மருத்துவர் ரவிசங்கரிடம் கேட்டபோது, ‘’பெண்ணின் கையில் மாட்டியது ஊசி அல்ல. ஊசிக்கு மேல் பகுதியில் பயன்படுத்தப்படும் வென்சுவான் என்னும் 1 மி.மீ. அளவுள்ள பொருள். இதற்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளக் கோவையில் உள்ள சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அங்கு சென்று அறுவைசிகிச்சை செய்து கொள்ளலாம். இதுகுறித்து எந்த அச்சமும் வேண்டாம். இதுபோன்று 1000-ல் ஒருவருக்கு நடைபெறுவது வழக்கம்’’ என்று தெரிவித்தார்.