கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றக் கோரி ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், ஜி.கே.வாசன் எம்.பி. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையின் மூலம் அறிவித்த வாக்குறுதிகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது இப்போதைய தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும். மேலும் தற்போதைய நிதிநிலை அறிக்கையிலேயே உரிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் என் தலைமையில் திமுக தேர்தலின்போது அறிவித்த குறைந்தபட்ச வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை மாவட்ட தமாகாவினர் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று தெரிவித்துள்ளார்.