கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 3-வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்த சசிகுமார்(37), கடந்த 2016 செப்டம்பர் 22-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக துடியலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். பின்னர் இந்த கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்டதால், வழக்கு விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய சையது அபுதாகிர், முபாரக் ஆகிய இருவர் மீது 500 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக முகமது ரபிகுல் ஹசன் என்பவர் 180 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் மீதும் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 3 முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.