ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை நீட்டிக்க கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பால், தூத்துக்குடியில் சுமார் 1,500 போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரவில்லை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு மூன்று மாதம் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் மே 13-ம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.
ஜூலை 30-ம் தேதி வரை மொத்தம் 2,266 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன், 11.19 மெட்ரிக் டன் வாயு நிலை ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய 3 மாத அனுமதி ஜூலை 31-ம் தேதியோடு முடிவடைந்தது. எனவே, ஸ்டெர்லைட் நிறுவனம் ஜூலை 30-ம் தேதியோடு ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்தியது.
கரோனா 3-வது அலை எச்சரிக்கை உள்ள நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு கடந்த 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,“தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. எனவே,ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை” என, ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளில் இந்த வழக்கு இடம் பெறவில்லை.
1,500 போலீஸார் குவிப்பு
இதற்கிடையே வழக்கு விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில், தூத்துக்குடியில் நேற்று ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை பகுதி, குடியிருப்பு பகுதி, ஆலையைச் சுற்றியுள்ளகிராமங்களில் சுமார் 1,500-க்கும்மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
மூன்று ஏடிஎஸ்பிக்கள், 13டிஎஸ்பிக்கள் மற்றும் கலவரத் தடுப்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வஜ்ரா வாகனம் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வழக்கு நேற்று விசாரணைக்கு வரவில்லை என்று தெரிந்ததும், பகல் 1 மணிக்கு மேல் போலீஸார் திரும்ப பெறப்பட்டனர்.