தமிழகம்

சேலம் சிறையில் ‘ஜாலியன் வாலாபாக்’ கொடூரம்: இன்று 66-வது நினைவு நாள்

எஸ்.விஜயகுமார்

ஜாலியன் வாலாபாக் படுகொலை போல் சுதந்திர இந்தியாவில் சேலம் சிறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கம்யூனிஸ்ட் கட்சியினர் 22 பேர் கொல்லப்பட்ட 66-வது ஆண்டு நினைவு நாள் இன்று (11-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கொடூரம் போல் சுதந்திர இந்தியாவில் சேலத்தில் கொடூரம் நடந்தது.

கடந்த 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி மீது தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் ஆங்காங்கே கிளர்ச்சி வெடித்தது. சென்னை மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழகம், கர்நாடகம், ஆந்திர, கேரளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்டோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது ஜாலியன் வாலாபாக் போல் சம்பவம் நடந்தது. இதுகுறித்து சேலம் பாரமகால் நாணய சங்க இயக்குநர் சுல்தான் கூறியதாவது:

கடந்த 1950-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 350-க்கும் மேற்பட்டோர் மதில் சுவர்களால் சூழப்பட்ட திறந்தவெளியில் நிறுத்தப்பட்டனர். சிறைத்துறை அமைச்சர் மாதவமேனன், தலைமை வார்டன் தாமோதரன், ஜெயிலர்கள் கிருஷ்ணநாயர், அய்யா பிள்ளை ஆகியோரது நடவடிக்கையால் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் 19 பேர் சுருண்டு விழுந்தும், 3 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இவர்களில் திருச்செங்கோடு காவேரி, சேலம் அரியாகவுண்டம்பட்டி ஆறுமுக பண்டாரம், கடலூர் சேக்தாவூத் ஆகிய மூவரும் தமிழகத்தையும் மற்றவர்கள் கேரளத்தையும் சேர்ந்தவர்கள் 121 பேர் காயமடைந்தனர்.

இதில் உடலில் 5 குண்டுகள் பாய்ந்து உயிர் தப்பிய நாராயண நம்பியார் (87), கேரள மாநிலம் கண்ணூரில் வசிக்கிறார். இவருக்கு கேரள அரசு பட்டயம் வழங்கி கவுரவம் செய்துள்ளது.

இவ்வாறு கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேலம் மாவட்ட குழு செயலாளர் தங்கவேலு கூறியதாவது: சேலம் சிறையில் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் தங்களுக்கு அரசியல் கைதிகளுக்கு உரிய கவுரவத்தை தர வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். 1950-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி போராட்டம் வெடித்தது. தொடர்ச்சியாக பிப்ரவரி 11-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடந்தது.

உயிரிழந்தவர்கள் நினைவாக சேலம் சிறை வளாகத்தில் நினைவுத்தூண், அஸ்தம்பட்டி சாலை முகப்பில் நினைவு வளைவு அமைக்க வேண்டும். உயிரிழந்தவர்களை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT